ராகுல் காந்தியின் போன் ஒட்டுக்கேட்பா? மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பாஜக பதிலடி!

பிரதமர் மோடி தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்குப் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி ஒரு ‘பழக்கமான பொய்யர்’ என விமர்சித்துள்ளனர்.

டெல்லியில் நேற்று (நவம்பர் 13) வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல் வெடித்தது.

மோடிக்கு நேரடி விவாதத்துக்கு ராகுல் காந்தி சவால்!

பிரதமர் மோடிக்கு மீண்டும் நேரடி விவாதத்துக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி, யார் தேச விரோதி, யார் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்து விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது:

“பிரதமருக்கு இது தெரியும். ஏனென்றால், அவர்தான் எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறார். அவர் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஒப்புக்கொள்ளும் நாளில், வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பது யார், தேச விரோதி யார், எவ்வளவு காலமாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய பிரியங்க் கார்கே!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதரவாகக் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ராகுல் காந்தி ஒருபோதும் ஆவணங்கள் இல்லாமல் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்ததில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால், அது உண்மையாகத்தான் இருக்கும். ஏற்கெனவே பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பெகாசஸ் மென்பொருள் முதலில் பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்கள் மீதே பயன்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தனது சொந்த அமைச்சரவை சகாக்களையே பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் மூலம் கண்காணிக்க முடியும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர்களையும் கண்காணிக்க மாட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

‘பழக்கமான பொய்யர்’ – பாஜக பதிலடி!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றவை என நிராகரித்த பாஜக தலைவர்கள், அவரது நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கினர். இதுகுறித்து கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “அவரது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதில் யாருக்கும் ஆர்வம் இல்லை. யாருக்காவது ஆர்வம் இருந்தால், அவரது மூளை ஏன் தினமும் பொய்களை மட்டுமே சிந்திக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் இருக்கும்” என்று விமர்சித்தார்.

அதேபோல், பாஜக செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறுகையில், “ராகுல் காந்தி ஒரு பழக்கமான பொய்யர். ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு பொய்யையோ அல்லது தவறான தகவலையோ பரப்பாமல் அவரால் இருக்க முடியாது” என்று கடுமையாகச் சாடினார். இதனால், ராகுல் காந்தியின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து காங்கிரஸ் – பாஜக இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.