உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம்: நிறுவனம் மன்னிப்பு!

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டதற்கு அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் நேற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகக் கூட்டாளிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகவும், இயல்புநிலை திரும்பி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மதிப்பதாகவும், தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகவும் கூறி, ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சேவை முடக்கம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகவும், சைபர் தாக்குதல் அல்லது செயற்கை நுண்ணறிவு முகவர்களுடன் இதற்குத் தொடர்பில்லை என்றும் மைக்ரோசாஃப்ட் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் திறன் மேம்பாட்டுப் பணியின்போது ஏற்பட்ட சிக்கல், அதன்பிறகு செய்யப்பட்ட மற்றொரு நெட்வொர்க் மாற்றத்தைத் தொடர்ந்து வெளிப்பட்டதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சேவைகளை முழுமையாக மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்த விசாரணை முடிந்த பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு தொடங்கிய இந்தச் சேவை முடக்கம், சர்வர்களின் செயல்நிலையைச் சரிபார்க்கும் கட்டமைப்பில் ஏற்பட்ட தோல்வியால் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பல சர்வர்கள் செயல்படாமல் போயின. இதன் காரணமாகப் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, மைக்ரோசாஃப்டின் அவுட்லுக் (Outlook), டீம்ஸ் (Teams) மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான கோபைலட் (Copilot) உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் பயனர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.