குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு மற்றும் நலன்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இந்நாள், குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு கொண்டிருந்த அன்பின் அடையாளமாகவும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நாளாகவும் இத்தினம் அமைந்துள்ளது.
நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“குழந்தைகளின் புன்னகையிலும், அவர்களின் மழலை மொழியிலும், மாசற்ற அன்பிலும் இறைவனைக் காணலாம்! நாளைய பாரதத்தின் நம்பிக்கைகளாகவும், நாட்டின் எதிர்காலத் தூண்களாகவும் திகழும் குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, சிறந்த ஆரோக்கியம், பாதுகாப்பான சூழல் மற்றும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமையாகும். அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்து, திறமைகளை ஊக்குவித்து, நல்லொழுக்கமும் தேசப்பற்றும் நிறைந்த சிறந்த குடிமக்களாக உருவாக்குவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் வாழ்த்து!
அதேபோல், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“குட்டிக் குட்டி சிரிப்புகள், குறும்புகள், கற்பனைகள், எண்ணற்ற கனவுகளுடன் உலகை வலம் வரும் அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
விண்ணைத் தொடும் கனவுகளைக் காணுங்கள்…
புதிய விஷயங்களைக் குதூகலத்துடன் கற்றுக்கொள்ளுங்கள்…
நல்ல பண்புகளையும் அன்பையும் மனதில் விதைத்துக் கொள்ளுங்கள்…
தன்னம்பிக்கையுடன் வெற்றிப் பாதையில் சிறகடித்துப் பறங்கள்!
செல்போன், சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்காமல், நண்பர்களுடன் விளையாடி, சிரித்து, மகிழ்ந்து உங்கள் அழகான மழலைப் பருவத்தை இனிமையாகக் கொண்டாடுங்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.





