அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா?  – அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன? 

அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவரது காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை…

அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவரது காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”சுயநினைவின்றி அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில்  இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது பெயரைச் சொல்லி மூன்று முறை அழைத்த போதும், அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததோடு அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்‌ என்றும், அவரது  காது பகுதியில் வீக்கம் உள்ளதாகவும், இசிஜி சீராக இல்லை எனவும் குறிப்பிட்டார். இதனை சட்டரீதியாக திமுக  எதிர்கொள்வோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.