தஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்

தஞ்சை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக அந்தக் கடையை மூட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை…

தஞ்சை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக அந்தக் கடையை மூட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி
வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22),
புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியைச் சேர்ந்த மணிகண்டன்
(22) ஆகியோர் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று இருந்தனர். நேற்று மீண்டும் விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பி வந்தனர். பின்னர், நேற்று இரவு மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு
பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாஸ்ட் புட் ஹோட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பினர். இரவு 10 மணி அளவில் திடீரென பிரவீன் உள்ளிட்ட
3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து வயிறு வலிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால்
மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3, பேருக்கும் தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  சம்பந்தப்பட்ட கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்காக இறைச்சி மாதிரிகள் எடுத்து செல்லப்பட்டது. பின்னர், மாவட்ட உணவு பொருள் அதிகாரி சித்ரா கடைக்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் கடையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இதேபோல ஒரத்தநாடு பகுதிகளில் நான்கு ஷவர்மா கடைகளில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.