VJS50: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதியின் ”மகாராஜா”!

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான “மகாராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம்…

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான “மகாராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல, ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற பாலிவுட் படத்தில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் நடித்துவரும் நிலையில், அண்மையில் அவரது 50-வது திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய்சேதுபதி நடிக்கும் 50-ஆவது திரைப்படத்தின் டைட்டில் ”மகாராஜா” என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

’குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். அஜனிஷ் பி லோக்நாத் இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் ஆக்‌ஷன் விருந்தாக வரவுள்ளதாக இயக்குனர் நிதிலன் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.