செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்டப்பூர்வமானதே என தமிழ்நாடு அரசு வாதம்!

செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , அவர் அமைச்சராக தொடர்வது சட்டபூர்வமானதே என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்…

செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் , அவர் அமைச்சராக தொடர்வது சட்டபூர்வமானதே என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆயினும் செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தது.

அதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் முதற்கட்டமாக சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் வாதங்களாவது:

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்டவிதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என வாதிடப்பட்டது.

இதனை அடுத்து எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட, தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.