“நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்

நானும் உங்களைப் போல் வருவேன் என கூறிய சிறுவனை பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த நடராஜன் – பத்திரகாளி தம்பதியின் மகன் ரோஹித் ஷர்மா. அங்குள்ள ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 6வது படிக்கும் இந்த சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதே கனவு.…

நானும் உங்களைப் போல் வருவேன் என கூறிய சிறுவனை பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த நடராஜன் – பத்திரகாளி தம்பதியின் மகன் ரோஹித் ஷர்மா. அங்குள்ள ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 6வது படிக்கும் இந்த சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதே கனவு. இந்தநிலையில், இந்த கனவை ஊக்குவிக்கும் சம்பவம் ஒன்று  அரங்கேறியது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். இந்த நிகழ்வை படம் பிடிக்க செய்தியாளர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுவன் ரோஹித் ஷர்மா, செய்தியாளர்களிடம் தான் படித்து மாவட்ட ஆட்சியராகி இது போல் ஆய்வு செய்வேன் என்றார். தன்னையும் படம் பிடிக்க வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

இந்த நிலையில், ஆய்வை முடித்துக் கொண்டு வந்த ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம், அவரை சந்திக்க சிறுவன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு ஆச்சரியம் அடைந்த ஆட்சியர், சிறுவன் ரோஹித் ஷர்மாவிடம் சென்றார். அப்போது, நானும் உங்களைப் போல் ஆட்சியராகுவேன் என தெரிவித்தார் சிறுவன் ரோஹித் ஷர்மா. 

இதனைக் கேட்டு மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, சிறுவன் ரோஹித் ஷர்மாவை பாராட்டினார். மேலும், சிறுவனின் தோளில் கை போட்டு சில நிமிடங்கள் கலந்துரையாடிய மாவட்ட  ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாணவனுக்கு புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார். அது மட்டுமல்லாது தனது சொந்தப் பணம் 500 ரூபாய் செலுத்தி, அந்த நூலகத்தில் அவரை உறுப்பினராக சேர்த்துவிட்டார். இந்த சம்பவத்தால், சிறுவன் ரோஹித் ஷர்மா பெரும் மகிழ்ச்சி அடைந்தார். மாவட்ட ஆட்சியர் பாராட்டி, புத்தகம் பரிசளித்தது, தனது லட்சியத்தை அடைய மேலும் ஊக்கமளிப்பதாக சிறுவன் ரோஹித் ஷர்மா தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.