தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவடத்தில் கொரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்து…

கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள் அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவடத்தில் கொரோனா பரவல் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறப்பு மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கிராமங்களில் பழங்குடியின மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராததால், அந்த கிராமங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டனர். இதன்படி, தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் மருத்துவ குழுவினர் சென்றனர்.

தடுப்பூசி மீதுள்ள பயம் காரணமாக, மருத்துவ குழுவினரை கண்டதும் ஓட்டம் பிடித்த கிராம மக்கள், அங்குள்ள மரங்களில் ஏறி ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தடுப்பூசி குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஒரு சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 600 பேர் வசிக்கும் அந்த கிராமத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டுடனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.