#Virudhunagar | ராஜபாளையம் ஐயனார் கோயில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு… சிக்கி தவித்த 9 பேர்!

ராஜபாளையம் ஐயனார் கோயில் ஆற்றில் சிக்கி தவித்த 9 பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்ஐயனார் கோயில் ஆறு உள்ளது. ஏற்கெனவே பெய்த மழை…

ராஜபாளையம் ஐயனார் கோயில் ஆற்றில் சிக்கி தவித்த 9 பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்
ஐயனார் கோயில் ஆறு உள்ளது. ஏற்கெனவே பெய்த மழை காரணமாக ஆற்றில் தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்று (நவ.2) விடுமுறை தினம் என்பதால் மலையடிப்பட்டி, அய்யனாபுரம், கூரைப் பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர் மற்றும்
தாட்கோ காலனியை சேர்ந்த 9 பேர் தங்கள் குடும்பத்துடன் ஆற்றில் குளிக்க
சென்றனர்.

தொடர்ந்து, ஐயனார் கோயில் ஆற்றில் குடும்பத்துடன் குளித்த அவர்கள், மாலை 5 மணியளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆண்கள் மட்டும் (9 பேர்) ஆற்றில் தொடர்ந்து குளித்துள்ளனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ராஜாம்பாறை, முள்ளிக்கடவு, வழுக்குப்பாறை ஆகிய பீட்டுகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றில் தண்ணீர் அதிகமாவதை உணர்ந்த அவர்கள் உடனடியாக மறு கரையில் ஏறி தப்ப முயன்றனர். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடந்து வர முடியாமல் அவர்கள் அபாய குரல் எழுப்பினர். இவர்களின் குரலைக் கேட்ட அவ்வழியாக சென்ற சிலர் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.