மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பத்து ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தின் வழியாக உள்ள வழித்தடத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளப்பட்டி, வேப்பனூத்து கிராமத்திற்கு நான்கு முறை அரசு பேருந்துகள் சேவை இயங்கி வந்துள்ளது. ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவு என காரணம் காட்டி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளான அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத நிலையே இருந்து வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று முதல் மலைப்பட்டி கிராமம் வழியாக செல்லும் வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து பத்து ஆண்டுகளுக்கு பின் தங்களது கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் பேருந்தில் பயணித்தவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தொடர்ச்சியாக இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கினால் கிராமப்புற மக்கள் நகர் பகுதிக்கு சென்று வரவும், வேலைகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்வதற்கு எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய அரசு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததையும், அதற்கு பின்னால் இருக்கும் சமூக, அரசியல் பின்புலத்தையும் குறித்து பேசுகிறது. 1990களில் நடைப்பதாக அந்த படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2011 முதல் இப்பொழுது வரை கூட கிராமங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த செய்தி சமூக ஆர்வலர்களை வருத்தமுற செய்துள்ளது.