தமிழ்நாடு அரசு பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஒரிரு நாட்களில் மீண்டும் இடம்பெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் மீண்டும் நேற்று (28-06-2021) இரண்டாம் வகையில் உள்ள 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதில் முதல்நாளான நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். மேலும் முதல் நாள் என்பதால் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்துள்ளதாகவும் நாட்கள் செல்ல செல்ல அதிகளவில் மக்கள் பயணம் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பேருந்துகளில் இருந்த திருவள்ளுவரின் படங்கள் மற்றும் திருக்குறள் அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் திருவள்ளுவரின் புகைப்படம், கருணாநிதி உரையுடன் கூடிய திருக்குள் ஆகியவை புதுப்பொலிவுடன் மீண்டும் இடம்பெறும் எனக் குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக புதியதாக 500 மின் பேருந்துகள் மற்றும் 2000 டீசல் பேருந்துகள் வாங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மின் பேருந்துகள் வந்தால் செலவினங்கள் குறையும் ஆனால் அதன் விலை அதிகம் எனவும் குறிப்பிட்டார்.







