இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயமடைந்து இருப்பதாகவும் அவருக்குப் பதில் வேறு ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 4 ம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய காயத்தின் தன்மை அதிகமாக இருந்தால் ஒட்டுமொத்த தொடரில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் என்ன மாதிரியான காயம் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தற்போதைய சூழலில் சுப்மன் கில், இந்திய அணியுடன்தான் இருக்க உள்ளார். அங்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட இருப்பதாகவும் காயம் தொடர்ந்தால், இந்தியா திரும்புவார் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக அவர் ஆடவில்லை என்றால், கே.எல்.ராகுல் அல்லது ஹனுமா விஹாரி ஆகியோரில் ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் இறக்கப்படலாம் என்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.







