குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தின் ஒரு பகுதி கீழராஜ…

குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தின் ஒரு பகுதி கீழராஜ குலராமன் ஊராட்சியாகவும், மற்றொரு பகுதி மேலராஜ குலராமன் ஊராட்சியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அருகே உள்ள கீழராஜ குலராமன் கண்மாய் கரையில் இரண்டு ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் மற்றும் பழக்கத்திற்கு உரிய உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குடிநீர் கிடைக்கும் ஆழ் துளை கிணற்றில் மண் மூடியதால் தண்ணீர் தடைபட்டுள்ளதால் அதன் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் பொருத்த சென்ற பணியாளர்களை, கீழராஜ குலராமன் ஊராட்சியை சேர்ந்த சிலர் தடுத்ததாக தெரிகிறது.

இதனால் மக்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டிய அவர்கள், இன்று காலை காலி குடங்களுடன் பொது மக்கள் ஆலங்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இரண்டு புறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி ப்ரீத்தி உள்ளிட்ட காவல் துறையினரும், வருவாய் துறையினரும் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டத்தை கை விட மறுத்த பொது மக்கள், பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. சமாதானக் கூட்டம் மூலம் பொது மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வட்டாட்சியர் சீனிவாசன் உறுதியை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.