கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு சில மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தினார். ஆனால், கரூரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஜய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புதுச்சேரியில் கடந்த 9ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஈரோட்டு அருகே விஜயமங்கலத்தில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரை இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்றுக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனையொட்டி அங்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கு பிரச்சாரம் நடைபெற உள்ள நிலையில் விஜயமங்கலத்தில் அதிகாலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். பார்க்கிங் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், தொண்டர்களுக்கு கட்சி வர்ணம் கொண்ட தொப்பி மற்றும் சால்வை வழங்கிவிட்டு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.







