அமெரிக்க பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை உயர்த்த, அந்நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, ஏப். 2ம் தேதி, முதல்கட்டமாக 25 சதவீதமும்; இரண்டாம் கட்டமாக ஆக. 27ல் மீண்டும், 25 சதவீதமும் வரியை உயர்த்தி அறிவித்தது. இந்த வரி விதிப்பால், இந்தியாவில் ஏற்றுமதி துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
“அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை & திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







