கன்னியாகுமரி, மக்களவை தொகுதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் வசந்த், இனி எப்பவும் தொகுதியில்தான் இருப்பேன் என்று ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த போட்டியிட்டார். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை 1,34,344 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார். விஜய் வசந்த 5, 67, 250 வாக்குகளைப்பெற்று சாதனைப்படைத்தார். இந்நிலையில் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்றால் அவ்வப்போது தொகுதிக்கு வாருங்கள் என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டர். “ அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ” என்று அவர் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த விஜய் வசந்த் ‘அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன். இது அடுத்த எலக்சன்ல வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த எலக்சன்ல நீங்க என் மேல் வைத்த நம்பிக்கைக்கு’ என்று பதிவிட்டார். மேலும் கன்னியாகுமரி தொகுதியில் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.







