“வாக்களித்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்று விஜய் செய்தி வெளியிட வேண்டும்” – தமிழிசை சவுந்தரராஜன்!

அரசியல் சூழலை, உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது… அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது. அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் தான் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

ஆனால் ஆக்கபூர்வமாகவும் உண்மை பூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டிய இன்றைய அரசியல் சூழலை, உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் சகோதரர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொள்வதும், வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்க கூடியதாக இருக்கிறது.

உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு விஜய் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் தங்களுக்கு வாக்களித்த மக்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கும் வரக்கூடாது என்பதையும் அன்பான வேண்டுகோளாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.