ரசிகர்கள் பல நாட்களாகக் கேட்டுவந்த கேள்விக்கு தற்போது கவுதம் அளித்த பதில் “வேட்டையாடு விளையாடு-2” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “வேட்டையாடு விளையாடு”. இப்படத்தில் கமலுடன் கமலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர். இதற்கு ஏற்கனவே பதிலளித்துள்ள கவுதம் மேனன் வேட்டையாடு விளையாடு பாகம் இரண்டிற்கான கதை வைத்திருப்பதாகவும், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இத்தகவல் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் இதற்கான முன்னெடுப்புகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் கவுதமிடம் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் குறித்துப் பல முறை கேட்டுவந்தனர்.
ஆனால் லாக்டவுன், தேர்தல் எனப் பல காரணங்களால் கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு கதை குறித்து கவுதம் மேனன் பேச இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் விக்ரம் படம் மூலம் கமல்ஹாசன் திரையுலகிற்கு மாபெரும் வெற்றியோடு கம் பேக் கொடுத்தார்.மேலும் அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2-ம் தேதி) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இவ்விழாவிற்கு கமல்ஹாசனைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி இருந்தார். கமல்ஹாசனும் அவரின் அழைப்பை ஏற்று இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
விழா மேடையில் பேசிய கமல்ஹாசன், படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே “வேட்டையாடு விளையாடு-2” பட்டதிற்கான கதையைக் கேட்டு என் சம்மதத்தை கவுதமிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது. எனவே முழுக்கதை என்னை வந்தடையவில்லை என்றார்.
பின்னர் நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்த இயக்குநர் கவுதம் மேனன், “வேட்டையாடு விளையாடு-2” பட்டதிற்கான கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் முழுக்கதையும் விரைவில் கமல்ஹாசனுக்கு வந்து விடும் என்றும் தெரிவித்தார்.
ரசிகர்கள் பல நாட்களாகக் கேட்டுவந்த கேள்விக்கு தற்போது கவுதம் அளித்த பதில் “வேட்டையாடு விளையாடு-2” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே, வேட்டையாடு விளையாடு – 2 படத்தின் முதற்கட்ட பணிகளில் இயக்குநர் கவுதம் மேனன் இருப்பதாகவும், அடுத்த வருடத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







