வேங்கைவயல் விவகாரம்; சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில்…

வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி போலீசார், 147 பேரிடம் நடத்திய விசாரணையில் இறுதியாக 11 பேர் மீது இறுதிக்கட்ட விசாரணை, மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே மலம் கலந்த குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அந்த மாதிரிகளையும், 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனையும் பெறப்பட்டு இரண்டையும் ஒப்பிட கோரிய சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு, புதுக்கோட்டை நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. மாதிரிகள் ஒப்பிட்டு பார்ப்பதற்காக தஞ்சாவூர் அல்லது சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பின் குற்றவாளிகள் யார் என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.இந்த நிலையில் சட்டப்பேரவையில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்தாண்டு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த நீரை பருகிய 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேங்கைவயல் விவகார வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சத்திய நாராயணா தலைமையில் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை குவளை முறை விவகாரத்திலும் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.