மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
பொன்னி வளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த, அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, வளநாட்டிலும், வீரப்பூரிலும் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மணப்பாறையை அடுத்த வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அண்ணன்மார் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னர் – சங்கர் கோயிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றதை தொடர்ந்து வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோயில் பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் வேடபரி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று ஸ்ரீபெரிய காண்டியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தேருக்கு ஊர் முக்கியஸ்தர்களால் கொண்டுவரப்பட்டது. அதன்பின் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, மாயவர் என்றழைக்கும் சாம்புவன் காளை முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடர்ந்து வீரப்பூர் ஜமீன்தார் பரம்பரை அறங்காவலர்கள் ஆர்.பொன்னழகேசன், கே.அசோக்குமார், ஆர்.தரனீஸ் மற்றும் பட்டையதாரர்கள் வடம் தொட்டு தர பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். முக்கிய வீதிகளில் வலம் வந்து பின் தேர் நிலைமண்டபத்தை அடைந்தது. நாளை புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.