வங்கியில் கொள்ளை முயற்சி; அதிர்ஷ்டவசமாக தப்பிய 8 கோடி மதிப்புள்ள நகை, பணம்

வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

வேதாரண்யம் அருகே செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.

நாகை மாவட்டம் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வங்கியில், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்துள்ளதுடன், 14 லட்சம் ரொக்கம் இருப்பு வைத்துள்ளனர்.

நேற்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் சிலர், வங்கியின் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் வைத்து வெட்டி எடுத்து உள்ளே புகுந்துள்ளனர்.இரண்டு பூட்டுகளையும் உடைத்து, லாக்கரை உடைக்க முயற்சித்த போது, வங்கி காவலாளி அங்கு சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், அவரை தாக்கி விட்டு தப்பியோடினர். இதனால் வங்கியில் நகைகளும், ரொக்கமும் தப்பின. தகவலறிந்து வாடிக்கையாளர்கள் வங்கியின் முன்பு திரண்டனர்.

வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளன என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.

வங்கி கொள்ளையில் ஈடுபட வந்த கொள்ளையர்கள், கேஸ் சிலிண்டரை விட்டு சென்ற நிலையில், அங்கிருந்த சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.