முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக 16-வது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையெடுத்து இன்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான ஆறு தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவுள்ளது. தமிழகத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் சனாதன சக்திகளிடமிருந்த பாதுகாக்கவேண்டிய நிலையில் யுத்தகளமாக வருகின்ற சட்டமன்ற தேர்தல் உள்ளது.

குறைந்த தொகுதிக்கு உடன்பாடு செய்யவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் தமிழகத்தின் சூழலையும் எதிர்கால அரசியலையும் கருத்தில்கொண்டு திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் தொடர்வதுதான் முதன்மையானது. மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் எந்த காரணத்தை கொண்டு சிதறிவிடக்கூடாது. அப்படிச் சிதறுவதற்கு விசிக காரணமாக இருந்துவிடக் கூடாது இடம் தந்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் சனாதன சக்திகளைத் தமிழகத்திலிருந்து முற்றாக அடித்து விரட்டவேண்டும் என்கிற ஒரு கொள்கை உறுதிப்பாட்டின் அடிப்படையில் விசிக தொகுதி உடன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குள் சிதறினால் பாஜகவின் சதித்திட்டங்களுக்குத் துணைபோவதாக அமைந்துவிடும் என்கிற அச்சம் விசிகவுக்கு மேலோங்கி உள்ளது. பாஜக அதிமுகவோடு பழகிக்கொண்டே அதிமுகவை அழித்தொழித்துவிடவேண்டும் என்ற மறைமுக செயல் திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜக கூட்டணிக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். அதற்கான சான்று பல உள்ளன. புதுவையில் என். ஆர் காங்கிரஸ் கட்சியுடன் உறவாடிக்கொண்டே அக்கட்சி உறுப்பினர்களை பாஜகவில் இணைத்திருக்கிறார்கள். அதேபோல் ஹரியானாவில் தோழமை கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரையும் விலைக்கு வாங்கினார்கள். எனவே அவர்கள் நட்புக்கும் நேர்மையாக நடந்துகொண்ட அரசியல் வரலாறு இல்லை. அப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் வேரூன்றினால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்குறி உள்ளது.

இதையெல்லாம் கருத்தில்கொண்டு திமுக தலைமையிலான கூட்டணியை வலிமைப்படுத்துவதும் இந்த கூட்டணி தொடர்ந்து தேர்தல் களத்தை வெற்றிகரமாகச் சந்திப்பதும் காலத்தின் தேவை என்பதை விசிக கருதுகிறது. அதன் அடிப்படையில் இந்த தொகுதி உடன்பாட்டில் ஏற்றுக்கொள்கிறோம்.
எந்தெந்த தொகுதி
எந்தெந்த தொகுதி என அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேசி முடிவு செய்யவுள்ளோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளது. ஆறு தொகுதிகளிலும் விசிக தனிச்சின்னத்தில் சுயேட்டை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழ்நாட்டில் பெரியாரும் அண்ணாவும் மற்றும் கலைஞர் கருணாநிதியும் கட்டி காப்பாற்றிய தமிழக மக்களின் நலன்களைக் குறிப்பாக சமூக நிதியைச் சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கிறது அதை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். இந்திய அளவில் சனாதன சக்திகள் வலிமை பொருவது தேசத்திற்கே ஆபத்து.

எல்லாவற்றையும் கடந்து திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும். அதிமுக வலிமை பெறுகிறது என்றால் அது பாஜக வலிமை பெறுகிறது என்று பொருள். அதிமுக வெற்றிபெறப் போகிறது என்றால் பாஜக வெற்றிபெறப் போகிறது என்று பொருள். அதிமுக, பாமக, பாஜக இந்த மூன்று கட்சிகளும் தங்களுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தி சமூக நீதிக்கு எதிரான திசையில் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது” என அவர் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இதுவரை மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் முஸ்லீம் லீக் தொகுதிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசிகவுக்கு தொகுதி உடன்பாடு குறித்த இழுபறி நிலவி வந்த நிலையில் தற்போது 6 தொகுதிகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு பத்து தொகுதிகள் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் உடன்பாடு குறித்து முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது திமுக கூட்டணியில் 234 தொகுதிகளில் 11 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

Saravana Kumar

மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மாநிலங்களுக்கு உத்தரவு!

Jeba Arul Robinson