அய்யா வைகுண்டரின் 189வது அவதார திருவிழாவையொட்டி, சென்னையில் ஊர்வலம் நடைபெற்றது.
அய்யா வைகுண்டரின் அவதார திருவிழா, வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள கோயிலில், இன்று 189வது அவதார திருவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அய்யா வைகுண்டரின் அகில திரட்டு ஆகமம், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் வைக்கப்பட்டு, வண்ணராப்பேட்டையில் இருந்து, மணலி புதுநகரில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலத்தை, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகி தங்கப் பெருமாள் கூறுகையில், அய்யா வைகுண்டரின் அவதார நாள் உலகம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விடுமுறை அறிவித்து, வாழ்த்தும் தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.







