குடியரசு தலைவர் நியமன மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜாவை நியமித்துள்ளது மூலம் பட்டியலின மக்களை பாரதிய ஜனதா கட்சியானது தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி என்றே தெரிகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், எம்.பியுமான டாக்டர் ரவிக்குமார் டுவிட்டர் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் . அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ரவிக்குமார் இப்படி கேள்வி எழுப்புவதற்கு மிக முக்கிய காரணமே இளையராஜா குறித்து பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வரிகளே எனத் தெரிகிறது. அது, “தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா. தனது பணியின்போது எண்ணிலங்காத தடைகளையும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் சந்தித்தவர். அனைத்து கஷ்டங்களையும் கடந்து தலைசிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார் இளையராஜா. கடந்த 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும், பத்ம பூஷன் விருதையும் வென்றார் இளைராஜா.
தனது இசைப்பணிக்காக பல்வேறு கவுரவங்களை பெற்றிருக்கிறார் இளையராஜா. 5 முறை தேசிய விருதையும், சங்கீத நாடக அகாடமி விருதையும் இளையராஜா வென்றிருக்கிறார். தடைகளை கடந்து சாதிக்க வேண்டும் என்பதற்கு இளையராஜாவின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இசையை மட்டும் புகழாமல், அவர் சார்ந்த சமூகம் குறித்தும், அதனால் அவர் சந்தித்த சவால்கள் குறித்தும் குறிப்பிடுவதன் மூலம் தமிழகத்தில் உள்ள பட்டியலின வாக்காளர்களை பாஜக தன் பக்கம் ஈர்க்க பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க சனாதன சக்திகளை வேரோடு சாய்க்க வேண்டும் என பாஜகவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பேசி வருகிறார். இந்த சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளையராஜா புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் மோடியை புகழ்ந்து தள்ளினார். அப்போது இது பட்டியலின சிந்தனையாளர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்” என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதற்கு முன்னுரை எழுதிய இளையராஜா,“அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது. நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது என இளையராஜா குறிப்பிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இளையராஜாவிற்கு நியமன மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதன் மூலம் அவரது இசைக்கு மரியாதையை பாஜக கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரது பின்புலம் குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பாஜக குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது, பட்டியலின மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை தங்களால் மட்டுமே பெற்று கொடுக்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குவது போல் உள்ளது.
இதனை நேரடியாக கேள்வி கேட்காமல், இளையராஜாவிற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி என அறிவித்தவுடன் தமது டுவிட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் எம்.பி. டாக்டர் ரவிக்குமார், மாநிலங்களவை உள்ளிட்ட மேலவைகளிலும் மக்களவை, சட்டசபைகளில் இருப்பதுபோல இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த பாஜக அரசு முன்வருமா ? தற்போது உள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களில் எத்தனை விழுக்காடு எஸ்சி, எஸ்டி உறுப்பினர்கள் உள்ளனர் என்ற விவரத்தை பாஜக வெளியிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் காலுன்ற பல்வேறு முயற்சிகளை பாஜக எடுத்து வந்தாலும், தமிழகத்தில் பாஜகவை ஆதரித்தால் சமூகநீதிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தை எதிர்கட்சிகள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்ற செய்கின்றன. மக்கள் மனதில் இவர்கள் இருவரில் யாருக்கு சிம்மாசனம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இராமானுஜம்.கி










