‘வணங்கான்’ படத்திற்கு பாடல் வரிகள் அமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பாலா குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான பாலா, வர்மா படத்திற்கு பிறகு தற்போது ‘வணங்கான்’ படத்தை இயக்கி வருகிறார். துவக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் தொடங்கிய இத்திரைப்படம், முதல் கட்டப் படப்பிடிப்பின் போது பாலா – சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் ‘வணங்கான்’ படம் தொடங்குமா அல்லது தொடங்காதா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய்யும், படத்தின் நாயகியாக க்ரீத்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாஷூம் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
தற்போது, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இந்த படத்திற்கு பாடல் வரிகள் அமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இயக்குனர் பாலா குறித்த உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார். அதில்,
பாலா!
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்
உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை
ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்
தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை
தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன்
போய் வா!
என தனக்கே உரிய கவிதைத் துவத்தோடு ‘வணங்கான்’ படத்தில் அவர் எழுதியுள்ள ஐந்து பாடல்கள் குறித்தும், இயக்குனர் பாலாவின் கதை திறன் குறித்தும் கவிதை வரிகளாய் தொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே பரதேசி படத்தில் பாலாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள கவிப்பேரரசு, முந்தைய ‘வர்மா’ படத்திலும் ‘வானோடும் மண்ணோடும்…’ என்ற பாடலை எழுதி இருந்த நிலையில், தற்போது
‘வணங்கான்’ படத்திலும் இணைந்துள்ளார்.
மேலும் ‘வர்மா’ படத்தின் போது நடிகர் விக்ரமுடன் ஏற்பட்ட உரசலை தொடர்ந்து, ‘வணங்கான்’ படத்தின் போதும் சூர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இயக்குனர் பாலாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, நம்பிக்கையை கேள்விக்குறி ஆகியிருந்த நிலையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த வரிகள் மேலும் ஒரு வெற்றிப்பயணத்தை தொடர அவருக்கு ஊக்கம் அளித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து
அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









