வேதாரண்யத்திற்கு மீண்டும் ரயில் சேவை- பொதுமக்கள் வரவேற்பு!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதை தொடர்ந்து ரயில் நிலையத்தில் வர்த்தக சங்கத்தினர்,பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்…

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதை தொடர்ந்து
ரயில் நிலையத்தில் வர்த்தக சங்கத்தினர்,பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து 2000ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் ரயில் பாதையில் திருத்துறைபூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையே ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மீட்டர் கேஜ் ரயில் பாதையை ரூ.294 கோடி திட்ட மதிப்பீட்டில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் முடிவுற்ற இத்திட்ட பணிகளை
தொடர்ந்து திருத்துறைபூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையிலான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இதனைதொடர்ந்து ஓடத்துவங்கிய திருத்துறைபூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையிலான ரயிலை வேதாரண்யம் ரயில் நிலையத்தில் வைத்து வர்த்தக சங்கத்தினர்,பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்தும்,இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.மேலும் ரயில் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருத்துறைபூண்டி-அகஸ்தியன்பள்ளி இடையிலான ரயில் சேவையானது வார வேலை நாட்களில் தினமும் காலை,மாலை என இரு முறை இயங்க உள்ளது.

— வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.