மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் கடந்த 2 ம் தேதி சமத்துவ நடைபயணத்தை தொடங்கியிருந்தார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மேற்கோள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்தை இன்று அவர் மதுரையில் நிறைவு செய்கிறார். இதனையொட்டி மதுரையில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், வைகோ, துரை வைகோ, நடிகர் சத்தியராஜ், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது : வைகோ நடந்த போது அவருடன் சத்தியம் நடந்தது, லட்சியம் நடந்தது, தமிழ் நடந்தது, கால்கள் உள்ள மதிமுக தொண்டன் நடந்து வந்தான். முதலில் களையப்பட வேண்டிய பேதம் சாதியா? மதமா? மதம் மாறுவது எளிது. ஆனால், சாதி மாற முடியாதது என பெரியார் சொன்னதை நெஞ்சில் ஏந்தி நடக்கிறார் வைகோ. தமிழ்நாட்டில் சாராயம் இருப்பது மறுக்க முடியாத உண்மை. போதை உள்ளூர் கலாச்சாரம் அல்ல, உலக கலாச்சாரம். தமிழ்நாட்டை விட்டு மது வெளியேறாமல் இருக்கலாம், ஆனால் மதுவை விட்டு தமிழர்கள் வெளியேற வேண்டும். மது கல்லீரலை பாதிக்கிறது. வைகோவின் கனவுகளில் ஒன்று இந்த ஆட்சி நீள வேண்டும் என்பது. காலை உணவு திட்டம் மூலம் கல்வி புரட்சி, மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் இந்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார திட்டங்கள்.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது : சமத்துவத்துக்காக, சம தர்மத்துக்காக 6000 கிமீ நடந்த தலைவன் வைகோ. அவர் நடக்கும்போது தியாகமும், நேர்மையும் உடன் நடந்தது. சராசரி மக்களுக்கு சினிமாவில் இருப்பவர்கள் ஹீரோவாக தெரிவார்கள் என்றால், சினிமாவில் இருக்கும் எங்களுக்கு ஹீரோவாக தெரிபவர் வைகோ. சினிமா நடிகர்களை இரண்டு நாள் சிறைக்கு போக சொன்னால் போக மாட்டார்கள். நிழல் ஹீரோக்களுக்கு மாற்றாக நிஜ ஹீரோவாக வாழ்பவர் வைகோ. திராவிட கழகம், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து Machine Gun போல மாறி தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.







