வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை

புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி…

புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வடசேரிப்பட்டியில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வடசேரி பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட் போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை சின்ன கொம்பன், வாடி வாசலில் இருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக கட்டையில் மோதி மயங்கி கீழே விழுந்தது. இதில், காளை மயங்கி கீழே விழுந்ததை கண்டு, பதறிப்போன விஜயபாஸ்கர் உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளையை மீட்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு சின்ன கொம்பன் காளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இதேபோன்று, விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வாடி வாசலுக்கு வெளியே எதிர்பாராதவிதமாக சுவற்றில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.