சென்னையில் இன்று தடுப்பூசி மையங்கள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை அடைந்தது. தினமும் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவப்படுக்கைகள், ஆக்ஸ்ஜன் பற்றாக்குறை என்று இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கே ஒரு சவலாக அமைந்தது. உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்குக்கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. டெல்லியில் பூங்காக்கள்கூட இடுகாடுகளாக மாற்றப்பட்டது.
மக்களை காப்பாற்ற தடுப்பூசிகள் மட்டுமே ஒரே வழியாக பார்க்கப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளின் இருப்பு இல்லாத நிலை நாடு முழுவதும் காணப்பட்டது. தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதின் பெயரில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களில் மக்கள் தினமும் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் தடுப்பூசி மையங்கள் செயல்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.







