உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லி, உத்தரபிரதேசம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முழு ஊரடங் கை விதித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. அம்மாநிலத்தில், கடந்த மாதம் 29 ஆம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மே 6 ஆம் தேதி வரை அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.







