தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று…

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7ம் தேதி ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டியை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் , அமைச்சர்கள் துரைமுருகன், பொன்மிடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கு. பிச்சாண்டி ஆறாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலையிலிருந்து 4 முறையும், கீழ்பென்னாத்தூரிலிருந்து இரண்டு முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 1996ம் ஆண்டு வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்தார். மேலும் இவர் திமுகவின் தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

மே 11ம் தேதி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் தற்காலிக சபாநாயகர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.