உத்தரப்பிரதேசத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பிரயாகராஜில் பகுதியில் அமைந்துள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கரைகளில் புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது நீரில் மிதக்கத்தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 24 உடல்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியின் கரையோரம் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கங்கை கரையில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்களின் புகைப்படங்கள் சர்வதேச நாளிதழ்களில் இடம்பெற்றது.
இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டுக்கான பருவகால மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதன்காரணமாக கங்கை நதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் கரையோரத்தில் புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளது. மேலும் சில உடல்களின் பாகங்கள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. கரையோரத்தில் புதைக்கப்பட்ட உடல்கள் பெரும்பாலும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடையது என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரயாகராஜில் நதியில் மிதிக்கும் உடல்கள் ட்ரோன் கேமரா மூலம் உள்ளூர் தொலைக்காட்சி சார்பில் படம்பிடிக்கப்பட்டது. அதில் சில உடல்களில் கொரோனா பாதுகாப்பு உடையில் சுற்றப்பட்டு மதித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மிதக்கும் உடல்களை பிரயாகராஜில் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டுவருகிறார்கள்.
இது தொடர்பாகப் பேசிய மாநகராட்சி மண்டல அதிகாரி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “கங்கை கரையிலிருந்து தற்போதுவரை மொத்தமாக 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட உடல்களை மின் மயானத்தில் தகனம் செய்துவருகிறோம். சில உடல்கள் ஆக்சிஜன் டியூப்களுடன் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல உடல்கள் தற்போதுவரை ‘Decomposed’ ஆகாமல் உள்ளது. பல உடல்கள் சமீபத்தில் புதைக்கப்பட்டதாக உள்ளது” என்கிறார் அவர்.

அதேபோல் பிரயாகராஜில் மாநகராட்சி மேயர் அபிலாஷா குப்தா நந்தி கூறுகையில், “நதியில் உடல்கள் மிதக்கப்படுவது குறித்து டிரோன் கேமரா மூலம் படம் பிடித்து காட்டி தொலைக்காட்சி நண்பர்களுக்கு நன்றி. கங்கை நதியில் உடல்கள் புதைக்கப்படுவது என்பது பல்வேறு சமுதாய மக்களால் காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழக்கமாகும். தற்போது கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால் கரையில் புதைக்கப்பட்ட உடல்கள் நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளன. அவ்வாறு மிதக்கும் உடல்களை மீட்டு தகனம் செய்துவருகிறோம்” என்றார்.







