கங்கை நதியில் வீசப்பட்ட சுமார் 100 சடலங்கள் பீகார் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ளன. இந்த சடலங்கள் கொரோனா நோயாளிகளுக்கானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகார் மாநிலம் பக்ஸர் (Buxar) மாவட்டத்தில் உள்ளது, சவுசா கிராமம். இங்குள்ள கங்கை நதியில், சுமார் 30, 40 சடலங்கள் இன்று கரை ஒதுங்கின. அதைக் கண்ட அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அது வைரலானது. பின்னர் உள்ளூர் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த சடலங்களை தின்பதற்காக நாய்கள் அந்த பகுதியை மொய்த்தன. கரை ஒதுங்கியதில் பெரும்பாலானவை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலமாக இருக்கலாம் என அந்தப் பகுதியினர் சந்தேகிக் கின்றனர். இந்த சடலங்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் பீகார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது சடலங்களை தகனம் செய்ய சுமார், 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதால், ஏழைகள் சடலங்களை கங்கையில் வீசிச் சென்றிருக் லாம் என அந்தப் பகுதியை சேர்ந்த அஸ்வினி சர்மா என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கரை ஒதுங்கிய சடலங்களை நாய்கள் தின்பதால், நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, சடலங்கள் கங்கை கரையில் ஒதுங்கி யுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இப்போது வேறு எதுவும் கூற முடியாது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மற்றொரு அதிகாரி, ’உத்தரபிரதேசத்தின் எந்தப் பகுதியில் இருந்து இந்த சடலங்கள் வீசப்பட்டன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் குறைவான எண்ணிக்கையிலான சடலங்கள் என்று சொன்னாலும் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கி கிடப்பதாக அந்தப் பகுதியினர் கூறியுள்ளனர். சடலங்களை உடனடியாக எடுத்து அரசு நிர்வாகம் தகனம் செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.







