“காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது நியாயமல்ல.

கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994 ஆம் ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை. தமிழக காவல்துறைக்கு 1198 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994-95ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996-ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997ஆம் ஆண்டிலும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998-99ஆம் ஆண்டில் 968 சார் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994-95 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000 ஆம் நாளில் நியமன ஆணை வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994-95ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கல் ஆகும்.

அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994-95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995 ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு காவல் ஆய்வாளராகவும், காவல் துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள 96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள். இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார் ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998-99 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020-21 ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004 ஆம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும். 2016 ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

அதற்கான காரணம், 1994-95ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல… மாறாக அரசு செய்த தவறு தான். 1994-95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல் 9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994-95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998-99, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்-ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு

ஒதுக்கப்பட்டுள்ள 20% இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.
தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.