மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகளை ஒழுங்கு படுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்ஸி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதுவரை பைக் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில், பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து , ஒரு குழு அமைத்து அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். அதுவரை, பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது . விதிகளை மீறி பைக் டாக்ஸி ஓட்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மாநில அரசு பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க முடியாது ஒழுங்குமுறை படுத்தலாம் என வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பை டாக்ஸிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும், இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.




