அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 4,000 நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக இரண்டு தவணைகளாக ரூ. 4,000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பு வழங்கி வழங்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஊரடங்கினால் முற்றாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசு கோயில்களில் பணியற்றி வரும் ஊழியர்களுக்கு வழங்கியது போல, நாட்டுப்புற கலைஞர்களுக்கும் குறைந்தபட்சமாக ரூ. 4,000 நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ, அமைப்புசாரா, முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்வதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறைந்தபட்ச தொகையாக ரூ.4,000 நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஆட்டோ பயணம் அத்தியாவசியமாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆட்டோ பயணத்திற்கு அனுமதிக்கப்பட்ட போதும் இ-பாஸ் எடுக்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பாலகிருஷ்ணன், இதனால், ஆட்டோ பயன்பாடு பெருமளவு தடைபட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு என்ற முறையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.