அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க திறன் வாய்ந்த அமைப்பு ஒன்று பிரத்யேகமாக தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடனை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீது ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் இவர்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ் ஓகா மற்றும் பிவி நாகரத்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அனைத்து நிதி மோசடி வழக்குகளிலும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல. குறிப்பாக பெரிய வழக்குகளில் மட்டுமே சிபிஐ அமைப்பை பயன்படுத்த வேண்டும். அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டால் ஒன்றுமே நடக்காது. அது சிபிஐ அமைப்புக்கு சுமையாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது நிதி மோசடி சார்ந்த குற்றங்கள் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களை கண்டறியவும் விசாரிப்பதற்கும் திறன்வாய்ந்த அமைப்பு தேவை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த மனு மீதான பதிலை மத்திய அரசு அளிப்பதற்கு ஆறு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.







