பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பின் காரணமாக காலமானார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜமுனா. இவர் தமிழில் மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும்,…

தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பின் காரணமாக காலமானார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜமுனா. இவர் தமிழில் மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஐதாராபாத்தில் வசித்து வந்த இவர் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் இன்று இவர் காலமானார். பழம்பெரும் நடிகை ஜமுனாவின் மறைவிற்கு தமிழ், தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் பிறந்த நடிகை ஜமுனா, சிறு வயது முதலேயே பள்ளி நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பு திறமையை இவரது தாயார் ஊக்குவித்து, உறுதுணையாக இருந்து வந்தார். இவர் தெலுங்கில் ஏறக்குறைய 190 படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சொற்ப எண்ணிக்கையுள்ள படங்களில் இவர் நடித்திருந்தாலும், அவை அனைத்தும் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிற்பவைகளாக உள்ளன. மிஸ்ஸியம்மா, தங்கமலை ரகசியம், கடன் வாங்கி கல்யாணம், நிச்சய தாம்பூலம் மற்றும் குழந்தையும் தெய்வமும் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் நடிகை ஜமுனா.

இவர் 1980களில் காங்கிரசில் இணைந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சி சார்பில் 1989ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் மிலன் என்ற இந்தி படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருதும், பண்டன்டி கப்புரம் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம் பேர் சிறப்பு விருதும், 1999ம் ஆண்டு தமிழக அரசின் கவுரவ எம்ஜிஆர் விதும் வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு என்டிஆர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.