சொன்னதை சொன்னபடி செய்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஐஎன்எக்ஸ் தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டரங்கம் வந்து சேந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமான வாயில்கள் வழியாக செல்லாமல், பிரத்யேக நுழைவாயில் வழியாக அரங்கத்துக்குள் சென்றார்.
மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இணையமைச்சர் எல்.முருகன் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
முதலில் வரவேற்புரையாற்றிய இணையமைச்சர் எல்.முருகன், “தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். தமிழக மக்கள் சார்பாக பிரதமரை வருக வருக என வரவேற்கிறேன். முதலமைச்சரையும் வரவேற்கிறேன்” எனத் தெரிவிக்க திமுகவினரும், பாஜகவினரும் உற்சாக முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய எல்.முருகன், “யார் என்ன சொல்கிறார்களோ அதை செய்வது அரிது. அரிதான மக்களில் ஒருவர் பிரதமர். சொன்னதை சொன்னபடி செய்திருக்கிறீர்கள். அதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி” என்று கூறினார்.







