சோத்து அரசியலை பேசும் சேத்துமான்!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘தமிழ்’ இயக்கும் சேத்துமான் படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘வறுகறி’ எனும் நாவலைத்தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தான் இயக்கும்…

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘தமிழ்’ இயக்கும் சேத்துமான் படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘வறுகறி’ எனும் நாவலைத்தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தான் இயக்கும் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூகத்தில் இருக்கும் சாதிய இறுக்கங்களையும் , ஒடுக்குமுறைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவது இயக்குநர் பா.ரஞ்சித்தின் பாணி. பிரச்சாரத்தொணியில் இல்லாமல் தேர்ந்த திரைக்கதையைக்கொண்டு கலைத்தன்மையோடு அவர் முன்னெடுக்கும் அரசியல் கருத்துக்கள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

பா.ரஞ்சித்தின் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்ந்து மற்ற இயக்குநர்களும் தங்களுடைய படங்களில் சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை பேசத்தொடங்கினர். இயக்குநராக மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் ப்ரொடெக்‌ஷன்ஸ் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, குதிரை வால் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துவருகிறார். தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளில் சமூகத்தில் சாதி மற்றும் வர்க்க ரீதியாக நிகழும் அவலங்களை வெவ்வேறு தளங்களில் காட்சிப்படுத்திவருகிறார் பா.ரஞ்சித்.

இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரித்து ‘தமிழ்’ இயக்கும் சேத்துமான் படத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசப்பினை காட்சிப்படுத்துவோடு உணவு அரசியலும் விவாதிக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் பன்றிக்கறி மற்றும் மாட்டுக்கறி அரசியலை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை மூலம் பிரச்சார நெடிகள் இல்லாமலேயே சாதியக்கட்டுமானங்கள் குறித்த விவாதத்தை இயக்குநர் தமிழ் எழுப்பியிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்படம் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல சென்னை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு இரண்டாவது விருதைப்பெற்றது . preview காட்சிகளின் மூலமும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. பா.ரஞ்சித்தின் பட்டறையில் இருந்து மற்றுமொரு வெற்றி படம் வந்திருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.