தனது 5 வயதில் காது குத்த நினைத்து நிறைவேறாத ஆசையினால் 50 வயதில் காது குத்தி அவரது உறவினர்கள் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
சிறு வயதில் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் காது குத்து வைத்து மொட்டை அடிப்பது வழக்கம். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்து வைத்து வருகின்றனர். உறவினர்கள், சுற்றத்தாரை அழைத்து கோயிலிலோ அல்லது வீட்டிலோ வைத்து கிடா வெட்டி காதனி விழா விமரிசையாக நடைபெறும்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது 50 வயதில் காது குத்திக்கொண்டுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. தனது ஆசையை பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் 50 வயது ஆன நிலையிலும் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தி உள்ளனர்.







