மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழர்களுக்கும் வேலை மறுக்கும், கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்எல்சி வெளியேற வலியுறுத்தி பாமக நாளை போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைத்து
கோடிக் கணக்கில் லாபம் ஈட்டும் என்எல்சி நிறுவனம், உள்ளூர் மக்களின்
நலன்களையும், சுற்றுசூழலையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மண்ணின்
பிரச்சினைகளையும், மக்களின் சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று பலமுறை
வலியுறுத்தினாலும் அதை செவிமடுக்க என்எல்சி மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 23
கிராமங்களில் இருந்து 36,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு தான் ஆண்டுக்கு ரூ.10,662 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக என்எல்சி வளர்ச்சியடைந்திருக்கிறது.
ஆனால், இதற்கெல்லாம் மூலதனமான நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்கப்படவில்லை. என்எல்சி நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கான விலையை கடலூர் மாவட்டம் தான் கொடுத்து வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புவது, மழைக் காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களைத்தான் என்எல்சி நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் கடல் நீர்
உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும்
ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீளமானவை.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற
தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நிலக்கரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் என்.எல்.சி சுமார் ரூ.45,000 கோடி வருவாய்
ஈட்டியுள்ள நிலையில், அதனால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி
செய்ய ரூ.447 கோடி, அதாவது 1% தொகையை மட்டுமே என்.எல்.சி. ஒதுக்கியுள்ளது. இது மிக மிகக் குறைவு. இவ்வளவு தீமைகளை செய்து வரும் என்.எல்.சி நிறுவனம், இன்னும் 12,250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரியை வெட்டி எடுக்கத்
தொடங்கினால் கடலூர் மாவட்டம் பாலவனமாக மாறுவதை தடுக்கவே முடியாது.
என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.
நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை
வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.
அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்து ஏமாந்த மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் இதில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.








