கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பாணிப்பட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான 2ஜி எத்தனால் ஆலையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசும்போது, இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று கூறினார். அரசியல் சுய நலம் காரணமாகவே இலவச திட்டங்கள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மறைமுகமாக விமர்சித்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு இலவச திட்டங்களை வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையைத்தான் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான வரிபாக்கியையும் தள்ளுபடி செய்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
அதே நேரம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களும், பிச்சைக்காரர்களும்கூட அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கும்போது வரிகட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார் மத்திய வரிகளில் மாநில அரசுகளின் பங்கு குறைக்கப்படுகிறது, சரக்கு மற்றும் சேவை வரி உணவுப் பொருட்களுக்கு சுமத்தப்படுகிறது, எனப் பட்டியலிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.




