பீகாரில் 2016 முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதன் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தின், துர்கௌலியா மற்றும் ரகுநாதபுரம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 21 பேர் சட்டவிரோதமாக அங்கு விற்பனை செய்யப்பட்ட ரூ.50 மதிப்புள்ள கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஏப். 2ம் தேதி 2 பேரும், வெள்ளிக்கிழமை அன்று 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளனர். மேலும், சிகிச்சையில் உள்ள 14 பேரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதில், 6 பேர் தங்களது கண் பார்வையை முழுவதுமாக இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நாகா ராய், ஜம்மு பைதா, ராஜா மற்றும் கலிஃபா ஆகியோரை மாவட்ட நிர்வாகம் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.







