பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மத்திய அரசின் நோக்கங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி புகார் கூறுவது மு.க.ஸ்டாலினுக்கு பழக்கமாகிவிட்டது. 2026-27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ-யின் இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் (பகுதி-1), 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூன்று மொழிகளில் 2 மொழிகள் கட்டாயமாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் பிற இந்தியப் பிராந்திய மொழிகள் ஆகியவை மாணவர்களுக்கு விருப்ப மொழிகளாக வழங்கப்படும். இதில் இந்தி திணிப்பு எங்கே இருக்கிறது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் தனது அமைச்சர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளிடமும் அவர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.” இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.







