இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் (Constitution Day) அல்லது சம்விதான் திவாஸ் (Samvidhan Divas) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மோடி மரியாதை!
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனிதமான நாளில், போற்றுதலுக்குரிய பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் அனைத்து சிறந்த தலைவர்களுக்கும் தலைவணங்கி எனது மரியாதையைச் செலுத்துகிறேன். அவர்கள் நமக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வடிவில் வழங்கியுள்ள பரிசு, இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நமது இலக்கை அடைவதற்கு இந்த அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து வழிகாட்டும். நமது அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும், அதில் இடம்பெற்றுள்ள மதிப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாகவும் அரசியலமைப்பு தினம் அமைகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாப்போம்!
மேலும், பலரும் ஒன்றிணைந்து ஆலோசித்து கவனமாக உருவாக்கிய கருத்துகள் ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை என்றும், அறிஞர்களால் புதிதாகச் சிந்திக்கப்பட்ட கருத்துகளும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் கவிதை வரிகளையும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களை நினைவுகூர்வதுடன், அதன் அடிப்படை மதிப்புகளையும் கொள்கைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசியலமைப்பு தினம் வலியுறுத்துகிறது.




