உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!

ரூ.78,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 5 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்கவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25 – புதன்கிழமை 5 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சாலை, ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளைச் சேர்ந்த இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.78,000 கோடிக்கும் அதிகமாகும். திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும், ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பான அதிகாரிகளை நியமித்து, உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்கவும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

55-வது பிரகதி கூட்டத்தில் ஆய்வு!

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான பிரகதி (PRAGATI) அமைப்பின் 55-வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் பிரதமர் மோடி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள் கட்டுமானச் செலவுகளை மட்டுமின்றி, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்குக் கிடைக்க வேண்டிய பலன்களையும் தாமதப்படுத்துகின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அதேசமயம், திட்டங்களை விரைந்து முடிப்பதுடன் கட்டுமானப் பணிகளின் தரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரூ.78,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் பிரகதி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகவும், சாலை, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி ஆகிய துறைகளின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் (ITI) செயல்பாடுகள் மற்றும் பிரதமரின் மேம்படுத்தப்பட்ட ஐடிஐகள் மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் தகுதியை மேம்படுத்தும் PM-SETU திட்டம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சாலை, நிலக்கரி, மின்சாரத் துறைகளுக்கு அறிவுறுத்தல்!

சாலைத் திட்டங்களை ஆய்வு செய்தபோது, அவற்றை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். திட்டங்களுக்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைவிட, அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நிலக்கரித் துறை சார்ந்த திட்டங்களைப் பொறுத்தவரை, திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், அதற்காக இடம்பெயர வேண்டிய மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில், அவர்களின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரத் துறையில், பரவலாக்கப்பட்ட சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உள்ளூர் வளங்கள் மற்றும் மின்சாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான இடங்களில் மின் நுகர்வு மையங்களுக்கு அருகிலேயே இத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் நம்பகமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதுடன், மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தையும் குறைக்க முடியும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐடிஐ பயிற்சியில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு!

தொழிற்பயிற்சி நிலையங்களின் (ITI) செயல்பாடுகள் மற்றும் PM-SETU திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, ஐடிஐகளை வலுப்படுத்தவும், அவற்றில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் முதலமைச்சர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தொழில் நிறுவனங்கள் ஐடிஐகளுடன் இணைந்து அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தற்போதைய மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை வழங்கவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்த மாநில அரசுகள், ஐடிஐகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அழைப்பு!

பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் எதிர்காலப் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் திறன்களை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப ஐடிஐகளுடன் இணைந்து பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி (Apprenticeship) வழங்குவதுடன், பயிற்சி முடித்த ஐடிஐ மாணவர்களை அதிக அளவில் பணியமர்த்தவும் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் நேரடி அனுபவம் கிடைப்பதுடன், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ற திறமையான பணியாளர்கள் கிடைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

‘3C’ அணுகுமுறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

தொழில் குழுமங்கள் மற்றும் ஒவ்வொரு துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஏற்கெனவே செயல்படும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வரவிருக்கும் முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, ஐடிஐ பாடப்பிரிவுகள், பயிற்சி வகைகள் மற்றும் பயிற்சி அளிக்கும் திறன் ஆகியவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐடிஐகளுக்கும் உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். இதனால் வாழ்வாதார நெருக்கடியால் ஏற்படும் இடம்பெயர்வும் குறைந்து, அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்கள் பங்களிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐடிஐ கல்வியில் ‘வகுப்பறை, நிறுவனம், வேலைவாய்ப்பு’ (Classroom, Company and Career – 3C) என்ற அணுகுமுறையைப் பிரதமர் முன்மொழிந்துள்ளார். இதன்படி, வகுப்பறைக் கல்வியுடன் தொழில் நிறுவனங்களில் நேரடி அனுபவம் மற்றும் பயிற்சியை இணைத்து, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தரமான முறையில் விரைந்து முடிப்பது, தாமதங்களுக்குத் தெளிவான பொறுப்புகளை நிர்ணயிப்பது மற்றும் ஐடிஐகள் மூலம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வலுப்படுத்துவது ஆகியவை இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.