விசிக நிறுவனத் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று தனியே சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து கடந்த திமுக அரசு நீதி அரசர் கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் மூவர் குழு ஒன்றை நியமனம் செய்தது. தற்போது அந்த குழுவின் பணி காலத்தை மேலும் 9 மாத கால அவகாசம் கொடுத்து புதிய தவெக அரசு நீடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் வழக்குரைஞர்கள் என்கிற வகையில் இந்த ஆணையத் தலைவரை இந்த குழுவை நேரிலேயே சந்தித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும், கட்சியின் பொருளாளர் எஸ் எஸ் பாலாஜியும், தேர்தல் பணி குழு முதன்மைச் செயலாளர் கணேசன் மூர்த்தியும், சென்னை மண்டல செயலாளர் இரா செல்வமும் ஒரு குழுவாக ஆணைய தலைவர் நீதி அரசர் கே.என்.பாட்ஷா உள்ளிட்ட மூவர் குழுவினரை சந்தித்து எங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறோம். கோரிக்கை மனுவாகவும் வழங்கி இருக்கிறோம்.
ஆணையத்திடம் மாதிரி சட்ட மசோதா ஒப்படைப்பு!
ஏன் இந்த சட்டம் தேவை என்பது குறித்து விளக்கமாக எங்கள் கட்சியின் சார்பில் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட நீதி அரசர் கே.என்.பாஷாவும் அவருக்கு துணையாக இருக்கிற உறுப்பினர்கள் ராமநாதன் ஐபிஎஸ்ம், பழனிக்குமார் ஐஏஎஸ்ம் இவ்வளவு நேரம் பொறுமையாக எங்கள் கருத்துக்களை கேட்டுக் கொண்டார்கள். ஒரு மாதிரி சட்ட மசோதாவையும் எங்கள் கட்சியின் சார்பிலே தயாரித்து ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கிறோம்.
இந்த ஆணையம் இந்த சட்டத்தின் தேவை குறித்த பரிந்துரைகளை விரைந்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் என்று நம்புகிறோம். இன்னும் இந்த ஆணையத்தை சந்திக்காத அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக அமைப்புகள் விரைந்து ஆணையத்தை சந்திக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன்வைக்கிறோம். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட முதன்மையான கட்சிகள் ஆணையத் தலைவரை இன்னும் சந்திக்கவில்லை என தெரிகிறது. அவர்களும் விரைந்து தங்கள் கருத்துக்களை இந்த ஆணையத்தின் முன் வைக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் அறிக்கை!
இந்த ஆணையம் தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று நியமிக்கப்பட்டு இருந்தாலும் கூட அகில இந்திய அளவில் இது பிற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை வழங்கும் அதன் மூலம் ஒரு சட்டம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆணவக் கொலைகள் தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்சனை என்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால் இது ஒரு சமூகப் பிரச்சனை தேசிய அளவில் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனை. சொல்லப்போனால் இந்திய ஒன்றிய அரசே இதை ஒரு சட்டமாக கொண்டு வந்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற அடிப்படையிலே மாநில அரசுகளை இந்த சட்டத்தை இயற்றிக்கொள்ளலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு தனக்கென்று ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான பெரும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. அதற்கான அடையாளம் நீதியரசர் கே என் பாஷாவின் தலைமையிலான இந்த ஆணையம். எப்படி வரலாறு நெடுகிலும் நாம் மண்டல் கமிஷனை பற்றி பேசுகிறோமோ அதைப்போல என் பாஷா கமிஷன் என்று பேசக்கூடிய வகையில் இதன் பரிந்துரைகள் அமையும். புதிய சட்டம் பிறக்கும். தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




