U19 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
மகளிருக்கான U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிம்மர் 35 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பர்ஷாவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
https://twitter.com/BCCIWomen/status/1618924956162887681
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், முதல்முறையாக நடைபெறும் U19 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குள் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி நுழைந்துள்ளது.







